ஞாயிறு, 21 ஜூன், 2009

இடிதாங்கி மனிதன் - பாகம் 01

இந்த சிறுகதையானது கேமன் மெல்வில் என்பவரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப் பட்டது. அதன் மூலம் ஆங்கிலம் என்பதால் அது தமிழில் மொழிமாற்றப்பட்டு உங்களுக்கு தரப் படுகிறது.







இடிதாங்கி மனிதன் - ஆங்கில சிறுகதை -
தமிழ் மொழி பெயர்ப்பு by ரமிலன்
மூலம் : The Lightning-Rod Man by Herman Melville (1819-1891)





என்னவொரு வழக்கத்துக்கு மாறான இடிமுழக்கம் இன்று என நான் நினைத்துக் கொண்டேன். அந்த மலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்திருந்த எனது வீட்டின் சூட்டடுப்பின் நெருப்புக்கு அருகில் (குளிருக்காக) நின்று கொண்டிருந்த எனக்கு மின்னல் என் கூரைக்கு மேலே பரந்து, அருகிலுள்ள மலைப் பள்ளத்தாக்குகளில் விழுந்து வானமெங்கும் கிளைகள் போன்று விரிந்து, சரிவாகக் கொட்டும் அடைமழைக்கு நடுவில் , ஈட்டி போன்று எனது தாழ்ந்த கூரையை பயமுறுத்தியது. இதைவிட சம வெளியில் நின்றிருந்தால் இந்த பயம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என நான் நினைத்து கொண்டேன்.

அந்த நேரம் யாரோ கதவருகில் நிற்கும் சத்தம் கேட்டது. இடி மின்னல் நேரமாகப் பார்த்து இந்நேரம் வீட்டைத் தட்டுவது யாராக இருக்கும்? அந்த மனிதன் கதவை அதற்குரிய தடியால் தட்டாமல் பாரிய சத்தத்துடன் பலவீனமான இந்த கதவை உடைக்கிறானே.

'வணக்கம் ஐயா' என்றான் அந்த புதியவன்.

'தயவு செய்து அமர்ந்து கொள்' என்றேன் நான்.

அவன் கையில் கொண்டு வந்திருக்கும் அந்த நூதனாமான கைப்பிடி என்னவாக இருக்கும்?

'இன்று நல்ல இடி மின்னல் தான், ஐயா'.

நல்ல இடிமுழக்கமா? , தாங்க முடியாமல் இருக்கிறதே என்றேன்.

நீ நனைந்திருக்கிறாய். இந்த சூட்டடுப்பின் அருகில் நின்று கொள் என்றேன்.

'ஒரு போதும் மாட்டேன்' என்றான்.

அவன் எனது குடிசையின் நடுவிலே நின்று கொண்டிருந்தான். ஒருவிதமான சந்தேகத்துடன் நோக்கவைத்தது அவனது உருவம் . கறுத்த தலைமயிருடன் புருவங்களுக்கு மேலே ஒரு பெரிய அடையாளம் அவனுக்கு. அவனுடைய தாழ்ந்து போன கண்களை சுற்றி நீல நிற கருவளையங்கள் ஆபத்தில்லாத மின்னல் வெளிச்சம் போலிருந்தது; இடி முழங்காத மின்னலைப் போல. அவன் முழுவதுமாக நனைந்திருந்தான். மழையால் ஒழுகியிருந்த குடிசை நிலத்திலே அவன் இன்னும் நின்று கொண்டிருந்தான். அவனுடைய நூதனமான கைப்பிடி மட்டும் அருகில் சாத்தி வைக்கப் பட்டிருந்தது.

அது நான்கு அடி நீளமான ஒரு பளபளப்பான செப்புக் கோல். நீளப் பக்கமாக அது ஒரு மரக்கோலுடன் இணைக்கப் பட்டு இரண்டு செப்பால் சுற்றப்பட்ட கண்ணாடிக் கோளங்களுடன் பொருத்தப் பட்டிருந்தது. அந்த உலோகக்கோல் முடிவில் கூரான முக்காலி வடிவமாக மின்னியது. அவன் அதன் மரப் பிடியை மட்டும் பிடித்து கையில் வைத்திருந்தான்.

ஐயா, என்றபடி நான் தலை தாழ்த்தி பணிவுடன் கூறினேன்: "எனக்கு அந்த மழை மின்னலுக்கு அதிபதியான மதிப்புக்குரிய வியாழ பகவானை சந்திக்கும் பாக்கியம் இருக்கிறதா? " அவன் அதே போல, மின்னலை கையில் ஏந்தி நிற்கும் பழைய கிரேக்க தெய்வம் போன்று தெரிந்தான். நீ அந்த கடவுளாகவோ அல்லது அவரின் தூதுவராகவோ இருக்கலாம்; எப்படியும் உன்னால் எங்கள் மலைகளில் உருவாக்கப்பட்ட இந்த இடிமின்னலுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். இதை கேட்டுக்கொள்: அவை சாதாரண ஓசைகள் அல்ல. அப்படியான சக்தியினையும் ஆற்றலையும் விரும்புவனுக்கு, இடியை பிறப்பிக்கும் கடவுளை தனது குடிசையில் வைத்திருப்பது சந்தோசம். ஆனால் தயவு செய்து, முதலில் அமர்ந்து கொள். நான் தரும் இந்த உடைந்து போன கதிரை, உன்னைப் போன்ற கடவுளுக்கு ஒரு நாளும் சமமாகாது. என்றாலும் மதிப்பை பார்க்காது உட்கார்.

நான் இவ்வாறு இனிமையாக பேச, அந்த புதியவன் ஒருபுறம் அதிசயத்துடனும் மறுபுறம் ஒருவித திகிலுடனும் என்னை பார்த்தான் ஆயினும் சிறிது கூட அசையவில்லை.

'ஐயா, தயை கூர்ந்து இங்கே வந்து அமருங்கள். இல்லாவிடின், உங்களை உலர்த்திவிட்டு மீண்டும் செல்ல முடியாது அல்லவா', என்றேன்.

ஈரப்பதனை தணிப்பதற்காக சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் அந்த சூட்டடுப்பினருகிலே, ஒரு கதிரையை வரவேற்கும் பாங்கில் போட்டேன். அது புரட்டாதி மாதமாகையால் குளிர் அவ்வளவாக இல்லை.

அவன் அதற்கு, 'ஐயா, என்னை மன்னியுங்கள். உங்கள் வரவேற்பை ஏற்றுக்கொள்வதை விட, உங்களை எச்சரிக்கிறேன்; என்னுடையதை ஏற்றுக்கொண்டு இந்த குடிசையின் மத்திக்கு வாருங்கள்; கடவுளே, இன்னொரு முறை பலமாக மின்னுகிறதே - ஐயோ அந்த அடுப்பை விட்டு விலகுங்கள்', என்று அவன் உரக்கக் கூறினான்.

நீங்கள் இவ்வளவு அலட்சியமானவரா? இப்படியான பாரதூரமான தருணத்தில் - ஒரு வீட்டின் அபாயமான பகுதி- இந்த குளிர்காயும் சூட்டடுப்பு என்று உங்கலுக்கு தெரியாதா? என்றான் அந்த மனிதன்.

"இதை நான் அறியவே இல்லையே!" , என்றேன் அமைதியாக.

அந்த புதியவன் இப்போது ஒரு பெரிய புத்திமதி கூறிய மகிழ்ச்சியில் இருந்தாலும், நான் மீண்டும் என்னையறியாமல் அடுப்புக்கருகில் செல்ல, ஒருவித தயக்கத்தில் இருந்தான். நான் அங்கு என்னால் முடிந்தளவு நிமிர்ந்தும் உறுதியாகவும் நின்றேன். ஆனால் எதுவும் பேசவில்லை.

ஒரு புது விதமான எச்சரிக்கை கலந்த பயமுறுத்தலுடன் அவன் இப்போது கத்தினான். கடவுளுக்காகவாவது , அந்த இடத்தை விட்டு விலகுங்கள்; உங்களுக்கு தெரியாதா, சூடான காற்றும் நிலக்கரியும் மின்னலை கடத்துமென்று. நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன் என்றான்.

ஐயா - மழைக் கடவுளே! என்னுடைய வீட்டில் எனக்கு யாரும் கட்டளையிட்டு எனக்கு பழக்கமில்லை! என்றேன் நான்.

என்னை அந்த ஆதி காலப் பெயரால் அழைக்க வேண்டாம். இப்படியான பயங்கரமான தருணத்தில் இப்படி கடவுளை அவமதிக்க கூடாது, என்றான் அந்த புதியவன்.

ஐயா தயவு செய்து தாங்கள் வந்த விடயத்தை கூற முடியுமா? இந்த புயலில் இருந்து பாதுகாப்பு தேடி வந்திருந்தால் - பணிவாக நடந்தால் , இடமுண்டு. ஆனால் வேறு விடயமாக வந்திருந்தால் அதை கூறுங்கள். நீங்கள் யார்?

'நான் இடிதாங்கி விற்கும் ஒருவன்' என்றான் அவன் மெல்லிய குரலில். எனது சிறப்பு என்னவென்றால் - கடவுளே! அட என்னவொரு இடி! - எப்போதாவது மின்னல் விழுந்திருக்கிறதா உங்களுக்கு மேல் - அதாவது உங்கள் வீட்டுக்கு அண்மையில்? இல்லையா? இப்படியான ஒன்று பொருத்தப்படுவது தான் நன்று! தனது உலோகப் பிடியால் நிலத்தைத் தட்டியவாறு, "உண்மையில்- இடி மின்னலை தாங்கும் பலமான கோட்டை என்று எதுவும் உலகில் இல்லை; ஆனால், இந்த குடிசையையும் இந்த கோலினால் பலமாக மாற்றலாம்", என்றான்.

சரி. உனது சிறப்பு வேலையைப் பற்றி கூற மறந்து விட்டாயே!

'நாடு முழுவதும் சென்று இடி தாங்கி விற்பதற்கான கட்டளைகளை பெறுவது தான் அந்த சிறப்பு வேலை'. 'இது தான் எனது மாதிரி கோல்' என்றான் அந்த கோலை தட்டியபடி. எனாகு மிகச் சிறந்த அனுபவமும் இருக்கிறது. சென்ற மாதத்தில் மட்டும், கிறிகனில்
(* ஒரு ஊர்) ஐந்து கட்டிடங்களில் 23 கோல்களை பொருத்தியிருக்கிறேன்.

இங்கே பார்! அங்கு தானே கடந்த வாரம் - சனிக்கிழமை நள்ளிரவு அந்த ஆலயத்தின் கோபுரம், அந்த பெரிய எல்ம் மரம் மற்றும் கூரையில் மின்னல் விழுந்தது? உன்னுடைய இடிதாங்கிகள் ஒன்றும் அங்கு இருக்கவில்லையா?

"கூரையிலும் மரத்திலும் இருக்கவில்லை - ஆனால் கோபுரத்தில் பொருத்தியிருந்தேன்."

“அப்படியானால், அதன் பயன் தான் என்ன?”

அதுவா? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான பிரயோசனம்! ஆனாலும் என்னுடைய வேலையாளின் கவனக்குறைவும் கூட காரணம்! அதை அவன் கோபுரத்தில் பொருத்திய போது அதன் ஒரு பகுதி உலோகக் கூரையில் உரசியதால் தான் அந்த விபத்து. அது அவனுடைய பிழை- எனதல்ல!

பரவாயில்லை. அந்த பெரிய சத்தத்தினை இங்கே கூட கேட்கக் முடிந்தது. கடந்த ஆண்டு மொன்றியலில் (*இடம்) நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டாயா? கட்டிலில் இருந்த ஒரு வேலைக்கார சிறுமியை மின்னல் தாக்கியது! அவள் கையில் உலோகத்தாலான மணிமாலை ஒன்று இருந்தது தான் காரணம்! உனது வேலைத் தளங்களில் கனடாவும் ஒன்றா?
இல்லையே, நான் கேள்விபட்டது அவர்கள் அங்கே பாவிப்பதெல்லாம் இரும்பு கோல்கள். அவர்கள் செப்பாலான எனது கோல்களைத் தான் பாவிக்க வேண்டும். இரும்பு இலகுவில் உருகிவிடும். அந்த கோல்கள் மிக மெல்லியதாக செய்யப்படுவதால் மின்னோட்டத்தை கடத்துவதற்கு தேவையான அளவில் இருப்பதில்லை. அதனால் அந்த கோல் உருக, கட்டடம் சேதமாகிறது. என்னுடைய செப்பு கோல்கள் அப்படியானவையல்ல. அந்த கனடா தேசத்து மக்கள் அறிவிலிகள்; அவர்கள் சிலர் அதை பிழையாக பொருத்துவதால் அது மின்னலை நிலத்துக்கு கடத்தாமல் வெடித்து சிதறுகிறது. ஆனால் எனது உண்மையான இந்த கோலை பாருங்கள்; ஒரு அடி கோல் ஒரு டொலர் மட்டுமே.

இப்படி இன்னொருவர் பொருளைப் பற்றி சொல்வது உனக்கு நல்லதல்ல.

இங்கே! இடிச்சத்தம் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. அது எங்களையும் நிலத்தையும் அண்மிப்பதை காட்டுகிறது. இதோ, இன்னொரு சத்தம். அருகில் நெருங்க நெருங்க இடிச்சத்தங்கள் இணைந்து ஒரே ஒலியாக கேட்கும். அங்கே! மறுதரம் ஒரு கீற்று!

அவன் சடுதியாக தன் கையிலிருந்த கோலை வைத்துவிட்டு, யன்னல் பக்கமாக சென்று, தன் வலக்கை விரல்கள் இரண்டால் மணிக்கட்டை அழுத்துவதை பார்த்ததும் - நான் 'என்ன நடந்தது?' என்றேன்.

நான் அதை கூறி முடிக்கவும் அவன் வியப்புடன் கூறினான்:

ஆ! மீண்டும் அதே முழக்கம். மூன்று நாடித்துடிப்பு நேரம் என்பதால் மூன்றிலொரு மைலுக்கும் குறைவான தூரம், அதோ - அந்த மரக் கூட்டத்துக்குள்ளே! நான் வரும் வழியில் அப்போதே வெட்டிய உயர்ந்த மூன்று தேக்கு மரங்களை கண்டேன்! அதன் உள்ளேயுள்ள திரவத்தில் இரும்பு இருப்பதால், வேறு மரங்களை விடவும் தேக்க மரங்கள் மின்னலை கவரும். உங்கள் நிலமும் தேக்கு மரத்தாலானது தானே?


ஆமாம், செறிவான தேக்காலானது. நீ இங்கு வந்த தனித்தன்மையான நேரத்திலிருந்து, நீ உனது பயணத்துக்கு பயங்கரமான வானிலையை தெரிவுசெய்கின்றதாக நினைக்கிறேன். இடி முழக்கமானது சத்தமிடும்போது , அந்த நேரங்களையெல்லாம் நீ வியாபாரம் செய்யும் சாதகமான காலங்களாக்கி விடுகிறாய்.

"அங்கே! அதே கெடுதியான சத்தம் மீண்டும்".

மற்றவருக்கு இப்படியான விடயங்களை கொடுத்து பயத்தை போக்கும் நீ மட்டும் கோழையாக இருக்கிறாயே!

சாதாரண மனிதரெல்லாம் பயணம் செய்வதற்கு நல்ல வானிலையை தேர்வு செய்வார்கள். ஆனால் நீயோ, இடி முழக்கதையல்லவா விரும்புகிறாய்...

நான் இடி நேரங்களில் பயணிப்பவன் என்பதை ஒத்துக்கொள்கிறேன் - ஆனால் சில முன்னெச்சரிக்கைகளில்லாமல் அல்ல. இங்கே! உடனே எனது மாதிரி இடி தாங்கியை பாருங்கள். ஒரு அடி ஒரு டொலர் மட்டுமே!

நான் சொல்வேன் - அது ஒரு சிறந்த கோல் என்று. ஆனால், உன்னுடைய அந்த குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகள் என்ன என்ன? அதற்கு முதல் , உந்த யன்னல் கண்ணாடிகளை சாத்த விடு. சரிவாக விழும் இந்த அடை மழையால் உள்ளே நனைகிறது. அவற்றை மூட வேண்டும்.

உங்களுக்கு பித்து பிடித்து விட்டதா? அந்த இரும்பு சட்டங்கள் சிறந்த கடத்திகள் என்று அறியவில்லையா? வேண்டாம் !

சரி. நான் இந்த மரக் கதவுகளை மட்டும் பூட்டுகிறேன். பின்னர், வேலைக்கார பையனை மரச் சட்டமொன்றை எடுத்து வரச் சொல்கிறேன். தயவு செய்து, அவனை அழைக்க அந்த மணியை அடிக்கும் கம்பியை இழு!

நீங்கள் சுயநினைவில் இல்லையா? அந்த மணியடிக்கும் கம்பி உங்களை தகர்த்துவிடும்! இடி மின்னல் நேரங்களில் உலோகக் கம்பியையோ அல்லது இரும்பு மணியையோ தொட வேண்டாம்!

தேவாலயங்களிலுள்ள அந்த மணி கோபுரங்களும் அதற்கு தப்ப முடியாதா? தயவு செய்து, இப்படியான நேரங்களில் எங்கே எப்படி இருந்தால் பாதுகாப்பு என்று கூறுவாயா?
வாழ்க்கைக்கு உத்தரவாதத்துடன் இந்த வீட்டில் நான் தொடக்கூடிய இடம் என்று ஏதாவது இருக்கிறதா?

இருக்கிறது - ஆனால் நீங்கள் இப்போது நிற்கும் இடமல்ல. அந்த சுவரிலிருந்து அப்பால் செல்லுங்கள்! சிலவேளைகளில், மின்சாரம் சுவரூடாக கிழே பாயும். அந்நேரம், மனிதன் அதை விட சிறந்த கடத்தி என்பதால் - அது சுவரை விட்டுவிட்டு மனிதனூடாக பாயும். ஆ...! இந்த மின்னல் மிக அருகில் விழுந்திருக்கிறது. பந்து போன்ற ஒரு பரந்த வெளிச்சம்!
**********
அனேகமாக! உனது கருத்துப்படி, இந்த வீட்டில் மிக பாதுகாப்பான இடமெது என்று உடனே சொல்?

இந்த அறைதான். இதோ நான் நிற்கும் இந்த புள்ளி தான் அப்படியான இடம்! இங்கே வாருங்கள்.

முதலில் அதற்கான காரணத்தைச் சொல்லு...

ஆ! ஒரு மின்னலின் பிறகான கடுமையான காற்று... இந்த வீடு ... வீட்டில்... இங்கே வாருங்கள்!

தயவு செய்து, நான் காரணம் கேட்டேன்...!

இங்கே என்னருகில் வாருங்கள்...!

மீண்டும் எனது நன்றிகள்! நான் எனது பழைய இடமான சூட்டடுப்பின் அருகிலேயே நின்று கொள்கிறேன். இப்பொழுது, இடி-தாங்கி மனிதரே, இடிகளற்ற இந்த கணத்தில் - இதற்கான விடையை தர முடியுமா: ஏன் இந்த அறை தான் பாதுகாப்பானதும் அதுவும் நீங்கள் நிற்கும் அந்த புள்ளிதான் மிகச்சிறந்த இடமென்றும்...?

புயலும் இடியும் தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. இடிதாங்கி மனிதன் சற்று ஆறுதலாக இருந்தான். அவன் கூறினான்:

"உங்களது வீடு ஒரே ஒரு மாடி கொண்டது; இதனுடன் நிலக்கீழ் சேமிப்பறையும் கூரையின் கீழே சிறிய சேமிப்பறையும் உள்ளடக்கியது. இந்த அறை இரண்டுக்கும் இடையில். அதனால் மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது பாதுகாப்பானது. ஏனென்றால், மின்னல் சிலவேளைகளில் முகில்களிலிருந்து நிலத்திற்கும் சிலவேளை நிலத்திலிருந்து முகிலுக்கும் பாயும். விளங்குகிறதா? இந்த நடு அறையை நான் தெரிவு செய்யக் காரணம், ஒருவேளை மின்னல் இந்த வீட்டைத் தாக்கினால் - அது புகைபோக்கி வழியாகவோ அல்லது சுவர் வழியாகவோ வரும். அதனால் இந்த இடங்களில் இருந்து விலகி செல்ல செல்ல பாதுகாப்பு அதிகம்! இப்பொழுதாவது அருகே வாருங்கள்... "

இப்போது. நீ தற்போது கூறிய ஒரு விடயம், எனக்குள் பயத்தை அதிகரிக்காமல், நம்பிக்கையை வளர்த்திருக்கிறது...!

அப்படி என்ன கூறிவிட்டேன்...?

சிலவேளைகளில் மின்னல் நிலத்திலிருந்து முகிலுக்கு பாய்வதாக கூறினாயே !

அதுவா! 'மீள-திரும்பும் மின்னல்' (Returning stroke) என்று அதை கூறுவார்கள். பூமியானது, குறிப்பிட்ட அந்த பதார்த்தத்தால் மிகையாக நிரம்பும்போது, அந்த மிகையை மேல்நோக்கி அனுப்பும்.

ஆகா, மீளத்திரும்பும் மின்னல். மிக்க நல்லது...
அதற்கு முதல், இங்கே வந்து கொஞ்சம் குளிர் காய்ந்து கொள்!

எனக்கு இங்கே ஒரு பிரச்சனையும் இல்லை. நனைந்து இருப்பதுதான் நன்று.

எப்படி...?

நீங்கள் செய்யக்கூடிய நல்ல விடயம் அதுதான் - இடி மின்னல் நேரத்தில் முழுவதுமாக நனைவது. எங்களின் உடலைவிட நனைந்த உடையானது சிறந்த கடத்தி. ஆகவே, மின்னல் எங்களில் விழுந்தால் - உடலை தாக்காது எங்களின் உடை வழியே கீழே சென்று விடும். ஆ, புயல் மீண்டும் அதிகமாகிறதே! உங்களிடம் கால்மிதி ஒன்று இருக்கிறதா? அவைகள் மின்னை கடத்துவதில்லை. அதில் ஒன்றை தந்தால், நான் அதில் நின்று கொள்ளலாம் - ஏன் நீங்களும் கூட... நன்றாக இருள்கிறது. நண்பகல் நேரமே மாலை போல இருள்...! அந்த கால்மிதி ஒன்று தயவு செய்து !

நான் ஒன்றை கொடுத்தேன். அந்த மலைகள் என் குடிசைக்குள் விழுவது போல இருந்தது.

"இப்போதைக்கு, நாங்கள் பேசாமல் இருந்து பயனில்ல" என்றேன் நான். எனக்கு, இடி மின்னல் நேரங்களில் வெளியே பயணம் செய்ய முன்னெச்சரிக்கைகளை சொல்ல முடியுமா...? என்றேன்.

பொறுங்கள் - இந்த இடியும் அடங்கட்டும்...!

இல்லையில்லை, முன்னெச்சரிக்கைகளை கூறு. உனது கருத்துப்படி நீதான் மிகப் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாயே? சொல்...

“அப்படியானால் சுருக்கமாக. பைன் மரங்களையும், உயரமான வீடுகளையும், தனித்திருக்கும் பண்ணை வீடுகளையும், உயர்ந்த நில புல்வெளிகளையும், ஆடு மாடு மந்தைகளையும், மக்கள் கூட்டத்தையும் நான் தவிர்ப்பேன். இன்று போல் நடந்து செல்வதானால், நான் வேகமாக நடப்பதில்லை. வாகனத்தில் போகும் போது, நான் அதன் பக்கங்களையோ பின்பக்கத்தையோ தொடுவதில்லை. குதிரையில் சென்றால், நான் இறங்கி குதிரையை நடத்தி செல்வேன். எல்லாவற்றுக்கும் மேலாக, உயரமான மனிதருக்கு அருகில் செல்வதில்லை.”

நான் காண்பது கனவா...? மனிதரே மனிதர்களை தவிர்ப்பதா? அதுவும் ஆபத்தான தருணங்களிலும்...?

*********************************************************************************************
ஒரு சிறு பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. அதை தருவதா இல்லையா என்பது தான் எனது யோசனை. சிலர் குஉருவார்கள் - கதையின் முடிவு இல்லாவிட்டால் தான் அது இனிமையாக இருக்குமென்று...

நன்றி+

2 கருத்துகள்:

புல்லட் சொன்னது…

தாங்கள் எலக்ரிக்கல் போல தென்படுகிறது? ஒடீர மின்னம் கடத்தியுமாக காணப்படுகிறது? ஆனாலும் ஒரு ஆங்கில நாவல் சிறப்பாக மாற்றப்படுகிறது... ஒரு சிறு காட்சியையும் பல பக்கங்களாக மாற்றும்அந்த நாவல்களின் பாங்கு நான் மிகவும் ரசிக்கும் பண்பொன்று... தொடரவும்... வாழ்த்துக்கள்...

புல்லட் சொன்னது…

நன்றாக இருக்கிறது தொடருங்கள்...

கருத்துரையிடுக